Thursday, May 6, 2010

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் 2010

கடந்த 3 மே அன்று உலகளவில் கொண்டாடப்பட்ட பத்திரிக்கை சுதந்திர தினத்தையொட்டி சி. ஐ. ஜே எனும் தகவல் சுதந்திர மையம் எதிர்வரும் 8 மே 'மக்களிடையே ஒற்றுமையை, அமைதியை வளர்ப்போம் ' எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. ஒரே மலேசியா எனும் கொள்கையை மையமாக கொண்டிருக்கும் நம் நாட்டில் மக்களுக்கு எம்மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது , உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம் எந்த அளவில் இருக்கிறது என்பதனை மக்கள் அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் பொது மக்கள் திரளாக வந்து இந்த கலந்துரையாடலை சிறப்பிற்குமாறு அழைக்கபடுகின்றனர் .

நிகழ்ச்சியின் நிரல் பின்வருமாறு :

திகதி : 8 may 2010
இடம் : அனெக்ஸ் , ௨ வது மாடி, செந்திறல் மார்க்கெட்
நேரம் : கலை 10.30 - பிற்பகல் 1.30

மேல் விபரங்களுக்கு , சிவ் எங் என்பவரை 03-40230772 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 15, 2010

அனைத்துலக பெண்கள் தினம் 2010 - பகுதி 1

சர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்யவேண்டும்:தேவகி

புராதன காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். 1789 இல் சமத்துவம், சுதந்திரம், பிரதிநிதித்துவம் கோரி பிரஞ்சு புரட்சியின் போது பெண்கள் அணிதிரண்டனர். எட்டு மணிநேர வேலை நேரம், பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தாக இப்போராட்டம் அமைந்தது.

1848 இல் பிரான்சில் இரண்டாவது குடியரசை நிறுவிய மன்னன் பெண்கள் அரசவை ஆலோசனைக்குழுவில் இடம் பெறவும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும் சம்மதம் வழங்கிய தினம் மார்ச் 8 ஆம் திகதியாகும்.
1869 இல் பிரித்தானிய பாரளுமன்றத்தில் முதல் முதலாக பெண்களுக்கான வாக்குரிமை பற்றி பேசப்பட்டது.

இவ்வரலாற்றுப்பின்னணியில் நாம் கிளாரா சற்கின் (Clara Zetkin)) அவர்களின் பாத்திரத்தை மறந்து விடமுடியாது. 1870 இல் யேர்மனிய சோசலிச இயக்கத்தில் தன்னை அமைப்பு ரீதியான பணியில் இணைத்துக் கொண்டவர். 1881 இல் சோசலிஸ்ற்றுக்களுக்கு எதிராக விசேட தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்ட இவர் மேலும் தனது பணிகளை பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஒஸ்திரிய நாடுகளின் சோசலிச இயக்கங்களில் தொடர்ந்தார். 1889 இல் இரண்டாம் அகிலத்தை நிறுவும் பேராயம் பாரீஸில் நடைபெற்றது. இதன் அமைப்பாளர்களில் ஒருவராக கிளாரா செயற்பட்டார். 1890 இல் யேர்மனி திரும்பிய இவர் சமூக ஐனநாயக கட்சியின் பெண்கள் இயக்கத்தின் தலைமைப் பதவியை ஏற்றார். சோசலிச தொழிற்சங்கங்களில் பெண்கள் அமைப்பாதல், தொழிலாளர் அமைப்புக்களில் பெண்களை இணைப்பதிலும் இவரது பங்களிப்பு கணிசமானது. சமத்துவம் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக கடமையாற்றிய வேளையில் பெண் தொழிலாளர்களின் நலன் குறித்து பல விடயங்கள் இப் பத்திரிகையில் வெளி வந்திருந்தன.
1910 இல் ஹோப்பன்ஹேகனில் நடைபெற்ற இரண்டாவது அகிலப்பேராயம் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை கோரிக்கையை வலியுறுத்தியது. மார்ச் 8 ஆம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் எனும் அறிக்கையை கிளாரா சட்கின் அவர்கள் தயாரித்தார். இக்கோரிக்கை இப் பேராயத்தில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் வாக்குரிமைக்கான போராட்டம்
டொக்டர் நல்லம்மா முருகேசு என்பவரால் பெண்கள் வாக்குரிமைக்கு சார்பாக கொண்டு வரப்பட்ட பிரேரணை 1919 இல் இலங்கை தேசிய காங்கிரசின் முதல் அமர்வின் போது நிறைவேற்றப்பட்டது. பெண்களின் வாக்குரிமைக்கான முக்கிய ஆதரவு 1920 இலிருந்து தொழிற்சங்க இயக்கத்திலிருந்தும், தீவிரவாத அரசியல் பிரிவுகளிடமிருந்தும் கிடைத்தது.

1927 இல் டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு வருகிறது. 1927 மார்கழி மாதம் இலங்கை பெண்களின் வாக்குரிமைச் சங்கம் உருவாக்கப்பட்டது. பெண்கள் தமது வாக்குரிமைக்கான கோரிக்கையை எழுத்து வடிவில் டொனமூர் ஆணைக் குழுவிடம் சமர்ப்பிக்க முடிவு செய்திருந்தனர். அக்னேஸ் டி சில்வா, நீல் குணசேகரா ஆகியோர் இக்கோரிக்கைக்கு ஆதரவான கையெழுத்து சேகரிப்பதில் ஈடுபட்டனர். ஆனால் கையெழுத்துக்களை சேகரிப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை.

”சில இடங்களில் எங்களைத் திரும்பி போகும்படி வந்த வழியைக் காட்டிவிட்டனர். சில பெண்களின் கணவன்மார் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்படியிருந்தும் ஓய்வொழிச்சலற்ற றிக்க்ஷோ வண்டி ஓட்டத்தின் பின்னரும், அயராத முயற்சியின் பின்னரும் நாங்கள் பலவகைச் சமூகத்தையும், சாதிகளையும் சேர்ந்த பெண்களின் கையெழுத்துக்களைப் பெறுவதில் வெற்றி பெற்றோம “ என அக்னேஸ் அவர்கள் தெரிவித்திருந்தார். பெண்களின் வாக்குரிமை தொடர்பானதும் மற்றும் உரிமைகள் தொடர்பாக போராடியவர்கள் வரிசையில் மீனாட்சி நடேசய்யர், திருமதி ஆர். தம்பிமுத்து (இவருடைய சொந்த பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மன்னிக்கவும்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பெண்கள் வாக்குரிமை சம்பந்தமாக அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டன. பொன்னம்பலம் இராமநாதன் போன்ற அரசியல்வாதிகளின் கருத்துப்படி “சகலருக்குமான வாக்குரிமை என்பது பன்றிகளின் முன் முத்தை விதைப்பது” போன்ற செயலாகும் என சொல்லப்பட்டது.

பெண்களின் வாக்குரிமை சம்பந்தமாக பலமான ஆதரவு, வடமாகாணத்தைப் பிரதிநிதிப்படுத்திய சட்டசபை உறுப்பினரான எஸ்.ராஜரத்தினம் அவர்களிடமிருந்து கிடைத்திருந்தது. “ஏன் நாங்கள் இலங்கையிலுள்ள பெண்களை அடிமைகளாகவோ, அரை அடிமைகளாகவோ பாவிக்க வேண்டும். அத்தோடு அவர்கள் தங்கள் வாக்குகளை நியாயமாகவே பாவிப்பார்கள் என்பது எமக்கு தெரிய வேண்டும் என்றார் “|( Hansard; vol. III, 1928: 1722).

காலனித்துவ நாடுகளில் இலங்கையே முதன் முதலில் வாக்குரிமையைப் பெற்ற நாடாகும்.1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்படுத்தப்பட்ட (ஐ.நா வின்) சமஉரிமை மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், அடிப்படை உரிமை மேம்பாடு தொடர்பான உடன்பாடுகளுக்கமைய பெண்களுக்கான சமஉரிமை கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
1975 ஆம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐநா சபை அறிவித்தது. 1977 ஆம் ஆண்டு ஐநாவின் பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

உலகளாவிய ரீதியில் தொடரும் போராட்டங்கள்
பெண்களது விடுதலைக்கான போராட்டமானது ஆரம்பத்தில் வாக்குரிமை தொடர்பாக தீவிரம் பெற்றாலும் கூட, காலப்போக்கில் அடுத்தடுத்த விடயங்கள் தொடர்பாகவும் இந்த போராட்டங்கள் தமது இலக்குகளை நகர்த்திச் சென்றன. சம வேலைக்கு, சம சம்பளம்: சொத்துடமை உரிமை: பிரசவகால விடுமுறை: விவாகரத்து உரிமை: கருத்தடை சாதனங்கள் மற்றும் கருக்கலைப்பிற்கான உரிமைகள்: பாலியல் தொல்லைகளுக்கு எதிரான போராட்டங்கள்……இப்படியாக இந்த போராட்டங்கள் இன்று வரையில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவற்றில் பலவற்றில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இன்னும் பலவற்றிற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது போராடி பெற்றவைகளை மீண்டும் இழக்காமல் இருப்பதற்காக தீவிரமாக போராடியாகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் சில எமது நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகம் சிரமம் இல்லாமலேயே வந்து சேர்ந்துவிட்டன. இன்னும் பல இன்னமும் வந்தடையாமலேயே இருக்கின்றன. இவற்றைவிட எமது சமூகத்தின் குறிப்பான ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்களை நாமேதானே முன்னெடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். இப்படியாக பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், அவற்றிற்கு எதிரான போராட்டங்களும் உலகளாவியவையாக இருப்பதால் நாமும் உலகலாவிய அளவிலும், எமது குறிப்பான பிரச்சனைகள் தொடர்பான குறிப்பான விடயங்களையும் உள்ளடக்கியதாக நாம் போராடியே ஆகவேண்டிய நிலையில் உள்ளோம். இப்படிப்பட்ட நிலையில் இந்த விதமான கொண்டாட்டங்கள் எமது போராட்ட பாதையை நினைவு படுத்தவும், எமது முன்னோர்கள் போராடி எமக்காக பெற்றுத் தந்துவிட்டுச் சென்றுள்ள உரிமைகளின் பெறுமதிகளை அங்கீகரிக்கவும், இன்னமும் வெல்லப்படாத உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பெறவும் உதவும். எம்மை சுற்றியிருப்பவர்களும், எமது குழந்தைகளும் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலமாக மட்டுமே விழிப்புணர்வு பெறுவர் என்பதால் இவை கற்பித்தல் மற்றும் பயிற்றுவித்தல் நோக்கிலும் முக்கியத்துவம் பெற்றதாக ஆகின்றன.

நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்பவை மனித இனத்திற்கு தேவையானவையும் சமூக ரீதியில் முக்கியமான அம்சங்களுமாகும். இவை தனிமனிதர்களின் வெறுமையை போக்கவும், தனி அடையாளங்களை இழந்து சகமனிதர்களுடன் வர்க்கமாக, சமூக சக்திகளாக ஒன்றுகலக்க உதவுவதுடன், உறவுகளை, நட்புகளை சந்திக்கவும் இன்ப துன்பங்களை, கருத்துக்களை பரிமாற, வாய்ப்புக்களை உருவாக்குகின்றன.

எல்லா சமூகங்களும் தமக்கென தனியான கொண்டாட்டங்களையும் பிரத்தியேக தினங்களையும் கொண்டிராமல் இல்லை. இவற்றின் சமூக பாத்திரத்தை நாம் சரியாக புரிந்து கொள்வது அவசியமாகும். இப்போது எம்மிடையே காணப்படும் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் சமய கொண்டாட்டங்களாக அமைந்து விடுகின்றன. இவ்வாறான கொண்டாட்டங்களை பிற்போக்கானவையாக நாம் காண்பதனால் எம் எல்லோராலும் திறந்த மனதுடன் இக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடிவதில்லை. மேலும் இவ்வாறான விடயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பதால் மட்டும் இவற்றை நாம் வழக்கில் இல்லாது ஒழித்து விடலாம் என்று கூறிவிட முடியாது. இவ்வாறான கொண்டாட்டங்களுக்கு மாற்றாக முற்போக்கானதும், மதசார்பற்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையதுமான கொண்டாட்டங்களை புதிதாக ஏற்படுத்திக் கொள்ள நாம் முன் வரவேண்டும். இதனை நாம் செய்ய தயங்கும் போது சமூகத்தில் காணப்படும் பிற்போக்கான அம்சங்களுக்கு எதிராக காத்திரமான போராட்டங்களை முன்னெடுப்பது சாத்தியமற்றதாகி விடுகிறது. நாம் பிற்போக்கானதும் மற்றும் பகுத்தறிவிற்கு அப்பால் பட்ட கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாது இருப்பதுடன் மட்டும் நின்று விடாமல் மேதினம், சர்வதேச பெண்கள் தினம் போன்றவற்றை ஊக்கமுடன் கொண்டாடுவதுடன் எமது குடும்பத்தினரையும், பிள்ளைகளையும் இவற்றில் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும், இல்லாத போது எமது பிள்ளைகளே நாம் கொண்டாட மறுக்கும் கொண்டாட்டங்களை சமூகத்திலிருந்து பின்பற்றிக் கொள்ளவும், பேணவும் முன்வரலாம்.

ஆகவே புதியன படைப்பதில், இந்த கொண்டாட்டங்களும் முக்கியமான பங்கைவகிப்பதாக கருதி அவற்றை கொண்டாடுவதை ஊக்கமுடன் செயற்படுத்த வேண்டும். அவற்றிற்கான சிறப்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்ள வேண்டும். புதிய கலாச்சாரத்தை படைப்பது என்பதை நாம் அன்றாட செயற்பாடுகள் மூலமாக சிறுகச் சிறுக கட்டமைக்க முன்வர வேண்டும். பொதுவாகவே கொண்டாட்டங்கள் என்பவை சமூகத்தில் இன்னமும் முக்கியமான பாத்திரங்களையும் ஆற்றுகின்றன. நண்பர்கள், உறவினர்கள் சந்தித்து கருத்துக்களை பறிமாறி மகிழ்ச்சியான இருப்பதும், வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்வதும் இந்த கொண்டாட்டங்களிலேயே. குழந்தைகள் புதிய உடைகளை உடுத்துவதும், இனிய உணவுப் பண்டங்களை ஒரு கை பார்ப்பதும் இந்த நாட்களிலேயாகும். இப்படிப்பட்ட முக்கியமான ஒரு சமூக, குடும்ப கொண்டாட்டத்தை எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளும் இன்றி ஒழித்துவிடலாம் என நினைப்பது தவறானது அல்லவா?

புலம் பெயர்ந்த நாடுகளில் எமது குழந்ததைகள் தமது அடையாளத்தை தேட முனைகின்றனர். நாம் புதியனவற்றை உருவாக்கி அவற்றை எமது கலாச்சார வெளிப்பாடுகளாக அவர்கள் முன் அறிமுகப்படுத்த தவறும் பட்சத்தில், நாம் கைவிட எப்போதோ தீர்மானித்துவிட்ட பழைய, பிற்போக்கான கொண்டாட்டங்களை தேடியெடுத்து அவற்றை கொண்டாட வேண்டும் என்று முனைகிறார்கள். பதின்ம வயதில் ஏற்படும் அடையாளப்படுத்தல் தொடர்பான அக்கறைகளும், சக வயதினர் கொடுக்கும் அழுத்தங்களும் (Peer Pressure) ), பல்வேறு கொண்டாட்டங்களும் வர்த்தகமய படுத்தப்பட்டிருப்பதும் இவற்றிற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. இன்று சாமத்திய சடங்கு நடத்துவது என்பதில் உறுதியாக நிற்பவர்கள் ஊரிலே பிறந்து வளர்ந்த பெற்றோர்கள் மாத்திரமல்ல. இங்கு பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, இங்குள்ள கலை – கலாச்சார செயற்பாடுகளினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சிறுமிகளும் தான். மாற்று சமுதாயத்தை கட்ட விழையும் நாம் எவற்றையெல்லாம் வெற்றிடமான விட்டுச் செல்கிறோமோ அவற்றையெல்லாம் சமூகத்தில் உள்ள படுபிற்போக்கான அம்சங்கள் நிரப்பத் தலைப்படுகின்றன. இது ஏன் நடைபெறுகிறது? பதில் இலகுவானதுதான். இயற்கையை போலவே சமூகமும் வெற்றிடத்தை அனுமதிப்பதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தேவைப்படும் புதிய அம்சங்கள் உருவாக்கப்படவில்லையானால், பிற்போக்குத்தனமான கொண்டாட்டங்களால் இந்த வெற்றிடமானது இட்டு நிரப்பப்படுகிறது.

சித்தாந்தம் என்பது வெறுமனே நம்பிக்கைகள், கருத்துக்கள் மற்றும் விழுமியங்களின் தொகுப்பு மாத்திரமல்ல. சித்தாந்தத்திற்கு ஒரு ‘பொருள்வகை ‘ வெளிப்பாடும் இருக்கிறது. சித்தாந்தம் என்பது சடங்குகள், கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு நடைமுறைகளையும் உள்ளடக்கியதே. மாற்றான முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சித்தாந்தங்களை கட்டமைக்க முனைபவர்கள், தமது முயற்சிகளை வெறுமனே கருத்துக்களின் தளங்களில் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்வதனால் அவர்கள் அடைய விரும்பும் சித்தாந்த மேலாண்மையை அடைய முடியாது. மாற்றை படைப்பதற்காக கருத்துக்களின் தளத்தில் நாம் மேற்கொள்ளும் எமது முயற்சிகளானவை, நடைமுறை மட்டத்திலும் – மாற்றான கொண்டாட்டங்கள், சடங்குகள், நிகழ்வுகள் போன்றவற்றை ஒழுங்கமைப்பதன் மூலமாகவும் பலப்படுத்தப்பட வேண்டும். இல்லாதபோது, நாம் வரித்துக் கொண்ட கொள்கைகளுக்கும், எமது வாழ்க்கை முறைகளுக்கும் இடையில் திட்டவட்டமான ஒரு இடைவெளி காணப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த இடைவெளிதான், அந்திய சித்தாந்தங்கள் வேரை ஊன்றுவதற்கான இடைவெளியை வழங்குகின்றன.

ஒருவரது சித்தாந்தத்திற்கும், அவரது ‘தன்னிலை’ (Subject) இடையிலான உறவென்பது மிகவும் சிக்கலானது. ஒருவிதத்தில் எமது சித்தாந்தங்களே எமது ‘தன்னிலை’களை கட்டமைக்கின்றன. மனிதருக்கும், அவர் தொடர்பு கொள்ளும் புறநிலை மற்றும் சமூகத்திற்கும் இடையிலான உறவென்பது மிகவும், நேரடியானதும், எளிமையானதுமல்ல. இந்த அர்த்தத்தில் அனுபவமானது நேரடியாக அறிவைத் தந்துவிடுவதில்லை. அறிவைப் பெறுவது அத்தனை இலகுவான, நேரடியான செயற்பாடாக இருப்பின் விஞ்ஞானிகளுக்கு தேவை இருக்கமாட்டாது அல்லவா? ஒவ்வொரு மனிதரும் சித்தாந்தத்தின் ஊடாகவே புற உலகுடன் தொடர்பு கொள்கிறார். இதனை இடையீட்டுச் செயற்பாட்டு ( Mediation ) என்பர். இந்த சிக்கலான உறவை மிகவும் எளிமைப்படுத்தி, இந்த கொண்டாட்டங்கள், மற்றும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைகளை நாம் முற்றாக நிராகரிக்க முனையும் போது நாம் மாற்றீடு செய்ய விரும்பும் சித்தாந்தமானது முறியடிக்கப்பட முடியாததாக நின்று நிலைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ஆகவே புதிய கலாச்சாரத்தை உருவாக்க முனைபவர்கள் இந்த சிக்கலான உறவுகளை புரிந்து கொண்டு, மாற்றான, கொண்டாட்டங்கள், நடைமுறைகள் போன்றவற்றை உருவாக்கிக் கொள்ள முனைப்பாக செயற்பட வேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதரது வாழ்விலும் நடைபெறும் முக்கியமான காலகட்ட மாற்றங்களை, வளர்ச்சியின் பருவ மாற்றங்களை குறிக்க சடங்குகள் இருப்பது உலகலாவிய நடைமுறையாகும். பிறப்பு, திருமணம், இறப்பு போன்றவை இவற்றுள் மிகவும் அடிப்படையானவையாகும். இப்படியாக வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான கட்ட மாற்றங்கள், அதனுடன் கூடவே புதிய பொறுப்புக்களையும் கொண்டு வந்து விடுகிறது. இந்த உணர்வானது சம்பந்தப்பட்டவர்களது மனங்களில் ஆழமாக பதிவது, தாம் ஏற்றுக் கொள்ளும் புதிய பொறுப்புக்களை சரிவர மேற்கொள்ள மிகவும் அத்தியாவசியமானதாகும். இதனையே இவை தொடர்பான சடங்குகள் செய்ய முனைகின்றன. எமது சமுதாயத்தில் இந்த சடங்குகள் என்பவை முற்றிலும் மதம் சார்ந்தவையாகவும், தீட்டு – தூய்மை போன்ற பிற்போக்கு கருத்துக்கள் மற்றும் சாதிய நடைமுகள் போன்றவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையனவாக இருக்கின்றன. அவை தவிர முன்பொரு சிறிய குலமரபு ( Tribal) சமூகத்தில் தேவையாக இருந்த சில சடங்குகள், அவற்றின் தேவைக்கான காலகட்டத்தை கடந்துவிட்ட பின்னரும், இன்றைய நவீன சமுதாயத்தில், அதன் சமூக பாத்திரம் அனைத்தையும் இழந்த பின்னரும் வெறுமனே தேவையற்ற ஆடம்பரங்களாகவும், பிற்போக்கு கருத்துக்களுக்கு எண்ணையூற்றுவதாகவும் மட்டுமே செயற்படுகின்றன. இப்படிப்பட்டவற்றிற்கு எதிராக நாம் தீவிரமாக போராடியே ஆக வேண்டியுள்ளது. ஆனால் இந்த பிற்போக்கான சடங்குகள் மற்றும் திருவிழாக்களுக்கு மாற்றான புதிதான மதசார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக விழுமியங்களை பரப்பக் கூடிய கொண்டாட்டங்கள்; மற்றும் விழாக்களை உருவாக்காமல், அந்த புதிய விழாக்களில் நாம் பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் நிலைமைகளை உருவாக்காமல் இந்த பிற்போக்கு கொண்டாட்டங்களை ஒழித்துவிட முடியாது. இப்படியாக புதிய விழாக்கள், கொண்டாட்டங்கள்; நடைபெறும் குடும்பங்களில் குழந்தைகளும் சிறுவயது முதவே இவை தொடர்பான கலந்துரையாடல்களின் ஊடாக வளர்க்கப்படுகையில் இவற்றை அவர்கள் தமது அடையாளப்படுத்தலின் ஒரு கூறாக இந்த புதிய விழாக்களை இயல்பாகவே ஏற்றுக் கொள்வார்கள்.

புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் என்ற வகையில் நாம் இந்த நாட்களை மிகவும் உற்சாகமாகவும், முடியுமானபோது அந்தந்த நாடுகளில் உள்ள பிரதான முற்போக்கு அணிகளுடனும் சேர்ந்தும் கொண்டாட வேண்டும். இந்த வகையான கொண்டாட்டங்கள் எமது பொறுப்புணர்வுகளை அதிகரிப்பதாக அமைய வேண்டும். எம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதாக, எமது உணர்வுகளை முனைப்பாக்கிக் கொள்ள, கூட்டான செயற்பாடுகளை முன்னெடுக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் இன்று அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு பின்னாலுள்ள முன்னைய தலைமுறைகளினது தியாகங்களை மதிக்கவும், நாம் எதிர் கொள்ளும் புதிய சவால்களை முறியடிப்பதற்கு திட சங்கற்பம் ஏற்கவும் இந்த விழாக்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி செய்வோமானால், இதற்கு மேல் இந்த தினங்கள் வெறுமனே சம்பிரதாயபூர்வமானவை என்ற நிலைமையைத் தாண்டி எமது போர்ப்பிரகடனங்களாக ஒலிக்கத் தொடங்கும். ஊர்வலங்களை ஒழுங்கு செய்வோம். அதில் நிறையவே சத்தம் செய்வோம். எமது உடைகளும், கொடிகளும், பதாகைகளும் எங்கும் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்யட்டும். எமது உற்சாகம் அருகில் இருப்பவர்களையும், எமது சுற்றத்தினரையும் தொற்றிக் கொள்ளுமாறு செய்வோம்.

நீண்ட காலமாக தமிழர் மத்தியில் இப்படிப்பட்ட பாரம்பரியங்களை முறையாக செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது தொடங்குவது ஆரம்பத்தில் பெரிய அளவில் பயன்களைத் தராமல் போகலாம். ஆனால் அடுத்தடுத்த தடவைகளில் இது சிறிது சிறிதாக பெருத்து இவற்றை எமது சமூகத்தின் புதிய நியமங்களாக மாற்றவதற்கு நாம் ஓயாமல் உழைக்க வேண்டும்.

உசாத்துணை நூல் : Casting Perls, The Women’s Franchise Movement in Sri Lanka- Malathi de Alwis & Kumari Jayawardena

தகவல் :
http://www.penniyam.com/2010/03/blog-post_5737.ஹ்த்ம்ல்


Wednesday, March 3, 2010

அனைத்துலக பெண்கள் தினம் - 2010


ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 -ஆம் திகதி அனைத்துலக பெண்கள் தினம் மிக விமரிசையாக உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றில் பெண்களின் உயர்வை அல்லது அடைவுநிலையை நினைவு கூறும் பொருட்டு இந்த தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

1975 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தினத்தின் கரு ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட கருவை மட்டும் சார்ந்து இல்லாமல், ஒவ்வொரு மனித / பெண்கள் உரிமை அமைப்புகள் தங்கலுக்கு விருப்பமான அல்லது சாதகமான பெண் உரிமையைப் பற்றிய விஷயங்களை கருவாக தேர்ந்து எடுக்கலாம்.

1975 - 2010 வரை உள்ள சி அனைத்துலக பெண்கள் தின கருக்கள் :

2010 - அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்புகள்
2009 - ஆண்களும் பெண்களும் ஒன்றிணைந்து பெண்கள் வன்முறையை ஒழிப்போம்
2008 - பெண்களிடம் முதலீடுங்கள்
2007 - பெண்கள் வன்முறை ஒழிப்போம்
2006 - முடிவெடுப்பதில் பெண்கள்
2005 - பெண்களுக்கான சம உரிமை : பாதுகாப்பான எதிகாலத்தை அமைத்தல்.
2004 - பெண்களும் எ.ஐ. வியும்
2003 - பெண்களின் சம உரிமையும், மில்லினியம் முன்னேற்ற கோல்களும்
2002 - இன்றைய ஆப்கானிஸ்தான் பெண்கள் : உண்மைகளும், வாய்ப்புகளும்
2001 - பெண்களும் அமைதியும் : பெண்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்
2000 - அமைதிக்காக பெண்கள் ஒன்றுபடுதல்
1999 - வன்முறையிலிருந்து பெண்களுக்கு விடுதலை
1998 - பெண்களும் மனித உரிமையும்
1997 - அமைதியில் பெண்கள்
1996 - முடிந்ததை கொண்டாடி, எதிர்காலத்தை திட்டமிடு
1975 - யுன் கொண்டாடிய முதலாவது அனைத்துலக பெண்கள் தினம்

Sunday, February 28, 2010

கற்பழிப்பு அது உங்களின் தவறு அல்ல !!! - பகுதி 2


கற்பழிப்பு என்பது ....

  • கற்பழிப்பு சம்பவங்கள் வாலிபப் பருவ பெண்களிடத்தில் தான்நடைபெறுகின்றன என சொல்லமுடியாது. ஏனெனில் வயது கடந்தபெண்களிடத்திலும் கூட இந்த கற்பழிப்புசம்பவங்கள் நடந்திருக்கின்றன.
  • கற்பழிப்பு இரவு நேரங்களிலும், தனிமையான, மறைப்புறமான இடங்களில் தான் நடைபெறும் என்று சொல்வதற்கில்லை. கற்பழிப்பு எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கூட நிகழலாம். பாதுபாப்பான இடங்களான வீடு, பள்ளிக்கூடம், வேலை இடம் என கற்பழிப்பு எவ்விடத்திலும் நடக்கலாம். கற்பழிப்பிற்கு நேரம், இடம் என ஒரு வரையறை இல்லை.
ஒரு வேளை நீங்கள் கற்பழிக்கப்பட்டிருந்தால் .........
  • உங்களது உடலை சுத்தம் செய்யாதீர்கள் / உடைகளை மாற்றாதீர்கள்.
உங்கள் முதல் கட்ட நடவடிக்கை உங்களை சுத்தம் செய்வதாய் தான் இருக்கும். ஆனால், அதைக் காட்டிலும் முக்கியம் என்னவென்றால் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பதே. இரத்தக்கறைகள், விந்துகள், நூல், தலை முடி போன்றவை யாவும் கற்பழிப்பை நிரூபிக்கும் முக்கிய ஆதாரங்களாகும்
  • ஒரு நண்பரிடம் சொல்லுங்கள்
உங்களை மருத்துவமனைக்கும், காவல் நிலையத்திற்கும் அழைத்து செல்லுமாறு அந்த நண்பரைக் கேளுங்கள். நடந்த சம்பவத்தை நினைவுக் கூறும் போதும், அவற்றை விவரிக்கும் போதும் ஒரு வித மன உளைச்சலுக்கு உள்ளாகவும் நேரிடும்.

  • உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
மருத்துவமனை ஊழியர்கள் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் முறையிடக்கூடும். சில சமயங்களில் காவல் துறையினரின் குற்ற அறிக்கைகள் மருத்துவமனைகளிலும் பதிவு செய்யப்படலாம் அல்லது நீங்கள் நேரடியாகவே காவல் நிலையத்திற்கு செல்லலாம். பின்னர் நீங்கள் மருத்துவமனைக்கு போகும் போது, ஒரு பெண் காவல் அதிகாரி உங்களுடன் துணைக்கு வருவார்.

மருத்துவமனையில் ....

உங்களை மருத்துவர்கள் பரிசோதிப்பதற்கு முன்னதாக, ஒரு அனுமதி படிவம் உங்களிடம் கொடுக்கப்படும். கிடைக்கப் பெற்ற விபரங்கள் காவல் துறையினரின் புலன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும். மருத்துவர் உங்களின் அந்தரங்க இடங்களைப் பரிசோதிப்பார். உங்களது ஆடைகளும் சோதனைக்கு உட்படும்.

காவல் துறையினரின் புலன் விசாரணை ..

காவல் துறையினரின் முதல் கற்பழிப்பு முறையீட்டுக்குப் பின், ஒரு பெண் காவல் அதிகாரி ( புலன் விசாரணைப் பிரிவு ) உங்களது சம்பவத்தை விசாரிப்பார். எல்லா விபரங்களும் சேகரிக்கப்படும். நீங்கள் சில வேளைகளில் குற்றவாளியை அடையாளங்காண காவல் நிலையத்திற்கு அழைக்கப்படலாம்.

காவல் துறையினரின் புலன் விசாரணைக்குப் பிறகு ...

அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர் ஒருவர் உங்கள முறையீட்டை விசாரிப்பர். கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும். ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் அவரால் எந்ததொரு குற்றச்சாட்டையும் வெளியிட முடியாது.


நீதிமன்றத்தில்..

நீங்கள் முறையீடு செய்தவராகையால் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களோடு சாட்சிக் கொடுக்க அழைக்கபடுவீர்கள். உங்களுக்கு ஒரு வழக்குரைஞர் தேவைப்பட மாட்டார். ஆனாலும் வழக்கிற்கு முன்னும், வழக்கு நடந்துக் கொண்டிருக்கும் போதும் உங்களது சாட்சிக்குஉறுதுணையாக ஒரு வழக்குரைஞர் ஏற்படுத்தப்படுவார். நீங்கள் கற்பழிப்பு குறித்தான ஆதாரங்களை வெளியிடும் போது, ஒரு வேளை நிதிமன்ற அவையிலுள்ள பொதுமக்களை வெளியேற்றக் கூடும்.

கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனைகள் :

பேனல் கோர்ட், செகஷன் 376- படி கற்பழிப்பு பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறைந்த பட்ச தண்டனையாக ஐந்து வருடங்களுக்கு குறையாமலும், கூடுதல் பட்சமாக இருபது வருடங்களுக்கு மேற்போகாமலும் மற்றும் சவுக்கடிகளையும் பெறுவார்.

குறிப்பு :
  • மலேசியர்களின் திருமணம் நடந்து முடிந்த பிறகு இல்லற வாழ்க்கையில் கற்பழிப்பு சம்பவம் நடந்தால் நடவடிக்கை எடுக்க மலேசிய சட்டத்திட்டத்தில் அரசாங்கம் அமுலாக்கவில்லை.
  • நீங்கள் கற்பழிக்கப்பட்டிருப்பின் கோபம், வேதனை, கலக்கம், குழப்பம், குற்றவுணர்வு, வெட்கம் போன்றவற்றால் ஆட்கொள்ளப்பட்டிருப்பீர்கள். தனித்தும், மற்றவர்கள் இடத்தே சேராமலும் இருப்பீர்கள். இவை வழக்கமாக ஏற்படக் கூடியவை.
  • நினைவில் கொள்ளுங்கள் ! கற்பழிப்பு உங்களுக்கெதிரான ஒரு குற்றம். அது உங்களின் தவறு அல்ல. உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, உங்களுக்கு வழிகாட்ட ஒரு நம்பிக்கையானவரைத் தேடுங்கள் அல்லது பெண்கள் உதவி / மறுமலர்ச்சி நிலையத்தின் உதவியை நாடுங்கள்.
தகவல் : பெண்கள் மறுமலர்ச்சி நிலையம், பினாங்கு

Tuesday, January 12, 2010

கற்பழிப்பு - இது உங்களின் தவறு அல்ல !!! - பகுதி 1


கற்பழிப்பு என்றால் என்ன?

கற்பழிப்பு என்பது உடலுறவு சம்பந்தப்பட்ட ஒரு வன்முறை குற்றமாகும். உங்களுக்கு உடன்பாடில்லாமல், விருப்பமில்லாமல் உங்களது மர்ம உறுப்பில் ஓர் ஆண் தன்னுடைய மர்ம நுழைப்பதே கற்பழிப்பு என சட்டம் சொல்கிறது. நீங்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்களாயின், உங்கள் விருப்பத்தோடு அல்லது விருப்பமின்மையோடு எந்ததொரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்தாலும் அது குற்றமே என சட்டம் சொல்கிறது.


பாலியல் வன்முறையோடு சம்பந்தப்பட்ட இதர குற்றங்கள்

மனிதத் தன்மைக்கு முரணாக ஒருவரை வற்புறுத்தி அவரது வாயில், மர்ம உறுப்பில் அல்லது ஆசன வாயில் எந்ததொரு பொருளையும் வலுக்கட்டாயமாக நுழைப்பது, உங்களை மனதளவில் அதிகமாக பாதித்தாலும், அது சட்டப்படி கற்பழிப்பு குற்றமாகாது. இம்மாதிரியான காரியங்கள் பாலியல் பலாத்காரங்கள், பண்பை மீறுதல், மனிதத் தன்மைக்கு முரணான உடலுறவு, கற்பழிப்பு முயற்சி போன்ற குற்றங்களின் கீழ்வரையறுக்கப்படலாம்.

கற்பழிப்பு என்பது .....
  • உடலுறவு அல்ல. அது ஒரு வன்முறை. கற்பழிக்கிறவன் தன் எண்ணம் ஈடேர கடுமையும், வன்முறையும் பயன்படுத்துவான். உடலுறவு உங்கள் சுய மரியாதையைக் குலைக்க ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும். உங்களை வேதனைப் படுத்தவும், சுய கௌரவத்தைக் குலைக்கவும் கோபத்தோடு கூடிய வன்முறையில் பாதிப்புக்குள்ளாக்குவதே கற்பழிப்பு எனப்படுகிறது.
  • இது உங்களின் தவறு அல்ல. உங்கள் விருப்பத்தின் பேரில் கற்பழிப்பு நடைபெறுவதில்லை. நீங்கள் கவர்ச்சியாக உடையணிவதும், செயல்படுவதும் உங்களை நீங்களே கற்பழிப்புக்குத் தாரை வார்க்கிறீர்கள் என்று பொருளாகாது. ஓர் ஆண் ஒருப் பெண்ணைக் கற்பழிப்பதற்கு அப்பெண்ணின் நடவடிக்கைகள் தான் வாய்ப்பும் உரிமையும் கொடுக்கின்றன என பொருள்படாது.
  • கற்பழிப்பு தெரியாத அறியப்படாத நபரால் தான் நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தங்களை கற்பழித்தவனை நன்கு அறிந்திருக்கின்றனர். கற்பழிப்பவன் உங்கள் நண்பராக, அயலானாக , காதலனாக, ஏன் உங்கள் குடும்ப உறுப்பினராக அல்லது சொந்த பந்தங்களில் ஒருவனாகக் கூட இருக்கலாம்.

Monday, January 11, 2010

பத்திரிகை செய்தி 25 -11-2009



16 நாட்கள் வன்முறையைப்பற்றி வெளிவந்த பத்திரிக்கை செய்தி

Sunday, January 10, 2010

கனவான எதிர்ப்பார்ப்புகள் - பகுதி 2

தான் எதிர்ப்பார்க்காத ஒன்று அங்கே நிகழப் போவதை அறியாத ரேவதியும் மற்றவர்களும் அவருடன் சென்றனர். அங்கே அவர்கள் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. களைப்பாக வந்த அனைவருக்கும் உணவு பறிமாறப்பட்டது. பிறகு அவர்கள் அனைவரும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு தத்தம் ஏஜண்டுகளுடன் அனுப்பப்பட்டனர். இதன் பிறகு நாம் வீட்டு வேலைக்கு அனுப்பப்படுவோம்; நன்றாக வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும்; பணம் சேர்த்து குடும்ப கஷ்டத்தை போக்க வேண்டும் என பல்வேறான கற்பனைகளுடன் பயணம் செய்தாள் ரேவதி. 30 நிமிட பயணத்திற்கு பிறகு, அவர்களை ஏற்றி வந்த கார் ஒரு தங்கும் விடுதியின் முன் நின்றது. அங்கே சில இளம் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்து, மோட்டார் சைக்களில் அமர்ந்து இருக்கும் வாலிபர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். சகிக்க முடியாத சில காட்சிகளும் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தனர். இங்கேவா நாம் வேலை செய்ய போகிறோம் என ரேவதி யோசித்து கொண்டிருக்கும் போது " ம்ம் .. யோசித்தது போதும்; சீக்கரம் இறங்குங்கள் " என அந்த ஏஜண்டு அவசரப்படுத்தினார்.